“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள் என சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

durai murugan periyar

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அமைச்சர் துரைமுருகன் கடுமையான கண்டனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ” மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் தந்தை பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர்.

தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு – சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியார்.

உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார், எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும், பெரியார் சொல்லாதவற்றையும்கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன. இதற்கும் தொலைநோக்குச் சிந்தனையாளரான பெரியாரே நமக்கு வழிகாட்டுகிறார்.

“மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்” என்று 1936-ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, இலட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது.

தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான – மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்”  எனவும் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai