சென்னை :தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கரூர் நெரிசல் அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக ஆனந்த் மீது, கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை, விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, BNS பிரிவு 105 கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை. BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி. BNS பிரிவு 125 மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை. BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் 12 கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது. TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உட்பட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், N.ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை, புதுச்சேரிக்கு போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
