சென்னை :சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்ற போதிலும், அவை தோல்வியில் முடிந்துள்ளன.
மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதற்கு முன் நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் முடிவில்லாமல் முடிந்தன. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதாகக் கூறி, பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
ஆனால் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. தூய்மைப் பணியாளர்கள் சார்பில் போராட்டக்குழுவினர் உடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால், பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தால் சென்னையில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன, இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு, சட்டரீதியாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளது, ஆனால் தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தை ஏற்க மறுத்து, நிரந்தரப் பணி உறுதி கோரி போராட்டத்தை தொடர்கின்றனர்.
