இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை!

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

TNGovt - Teachers

சென்னை :இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை செப்.11ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது குறித்து ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், 2009-ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு (அடிப்படை ஊதியம்) இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருளாக இருக்கும். இதனால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) தொடர்ந்து உண்ணாவிரதங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிவித்து வருகிறது.

கடந்த 2023 ஜனவரியில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதிலும், முன்னேற்றம் இல்லை. ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளனர்.