சென்னை :அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்து மனம் திறந்து பேசினார். “நாங்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று அவர்களை அரவணைத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும்,” என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை, மாறாக ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்று மட்டுமே குறிப்பிட்டார்.இந்தக் கூற்று, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, அதிமுகவில் உட்கட்சி பிளவுகளையும், தலைமைக்கு இடையேயான மோதல் போக்கையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பல அரசியல் தலைவர்கள், இது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பார்க்க, மற்றவர்கள் இதை உட்கட்சி மோதலின் அடையாளமாக கருதுகின்றனர்.இதற்கு பதிலளித்த எடப்பாடி கே. பழனிசாமி, செங்கோட்டையனின் கூற்றை மறுத்து, “ஆறு பேர் என்னை சந்தித்தது பச்சைப் பொய். அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், கட்சியில் ஒற்றுமையை வலியுறுத்தி, “அதிமுக ஒருங்கிணைந்து செயல்படும். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை யாரும் தவிர்க்க வேண்டும்,” என்று கூறினார். இந்த முரண்பட்ட கருத்துகள், அதிமுகவின் உட்கட்சி இயக்கவியலை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இன்னும் இதுகுறித்து எடப்பாடி கே. பழனிசாமி பல விஷயங்களை பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
