சென்னை :சென்னையில் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதை எதிர்த்து உழைப்பவர் உரிமை இயக்கத்தின் கீழ் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10-வது நாளாக முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட 7-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது.
முதல் ஆறு கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமுகமான முடிவை எட்டவில்லை. அமைச்சர் சேகர்பாபு நள்ளிரவு வரை நடத்திய பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் எனவும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியைத் தொடர அனுமதிக்கக் கோரியும் பணியாளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அரசு தரப்பு கோரிக்கைகளை சட்டரீதியாக பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி, போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ. சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
