சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் இன்னும் அலைக்கழிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அரசின் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரை நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் கூட்ட நெரிசலால் 41 பேரின் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்தச் சோகத்தின் பின்னணியில், அரசு அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியின் தவறுகளை ஸ்டாலின் விரிவாக விவரித்தார்.
“விஜய்யின் 7 மணி நேர தாமதமே நெரிசலுக்கு முதல் காரணம்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியது, அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கான அனுமதி கோரிக்கைகள், கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்பு சென்றன. செப்டம்பர் 25-ஆம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்பட்டது, ஆனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டது.
பின்னர், அதே நாள் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 515 உள்ளூர் காவலர்கள் – மூன்று கூடுதல் SP-கள், 5 DSP-கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் – பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளி மாவட்டங்களிலிருந்து 91 காவலர்கள் (1 DSP, 2 ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை, 20 அதிவிரைவு காவலர்கள்) வரவழைக்கப்பட்டனர்.
மொத்தம் 606 காவலர்கள், வழக்கமான அரசியல் கூட்டங்களைவிட அதிகமாக அமர்த்தப்பட்டனர். 10,000 பேர் வரலாம் என்று தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், அதைவிட அதிகம் வரலாம் என எதிர்பார்த்து கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட தாமதமும் தவறுகளும் சோகத்தைத் தூண்டின. அனுமதி மனுவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், தவெக பொதுச் செயலாளர் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என்று அறிவித்ததால், காலை முதலே ஆயிரக்கணக்கானோர் கூடத் தொடங்கினர்.
விஜய், சென்னையில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு, 9:25 மணிக்கு திருச்சியில் இறங்கி, நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக இரவு 7 மணிக்கு கரூரை அடைந்தார் – 7 மணி நேர தாமதம். இந்தத் தாமதம், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெரிசலை ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்கள் குடிநீர், உணவு வழங்கவில்லை பெண்கள் இயற்கைத் தேவைகளுக்காக வெளியேற முடியவில்லை. இவை அனைத்தும் நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
மேலும், முதல்வர் ஸ்டாலின், அரசின் விரைந்த நடவடிக்கையை வலியுறுத்தினார். “நெரிசல் ஏற்படுவதற்கு முன் எந்த ஆம்புலன்ஸும் வரவில்லை. நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்புப் பணி முழு வீச்சில் தொடங்கியது. மீட்பு நடக்கும்போது, தவெகவினர் 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கினர்” என்று அவர் விளக்கினார். அரசு சட்டப்படி விரைந்து செயல்பட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
