மதுரை :மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். “உங்க விஜய் உங்க விஜய், உயிரென வர்றேன் நான்” என்ற தவெக கொள்கைப் பாடல் வெளியீடு, அவரது செல்ஃபி வீடியோ, மற்றும் ரேம்ப் நடை ஆகியவை தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின.
அதே சமயம், மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தல் உத்திகள் மற்றும் திமுக குறித்து விமர்சனங்களை முன் வைத்தும் பேசினார். எனவே, அவருடைய பேச்சுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தவெக மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய “நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பு. ஆனால், இந்த கூட்டத்தை வைத்து ஆட்சியை கைப்பற்ற முடியாது. ரசிகர் பட்டாளம் வேறு, அரசியல் தெரிந்த களப்பணியாளர்கள் வேறு. இரண்டு மாநாடுகளை நடத்திய பிறகும், தவெகவின் கொள்கை, கோட்பாடு என்னவென்று கட்சியினருக்கே புரியவில்லை. விஜய்யின் பேச்சில் ஆக்கப்பூர்வமான கருத்தோ, கருத்தியலோ இல்லை,” என்று கூறினார்.திருமாவளவன் மேலும் கூறுகையில், “1977-ல் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த காலம் வேறு, இப்போதைய காலம் வேறு. 2026 தேர்தலில் திமுகவை விஜயால் வீழ்த்த முடியாது.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், சாதிய ஆணவப் படுகொலைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து மதுரை மாநாட்டில் விஜய் ஏன் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். தவெக மாநாடு “வெற்றுக்கூச்சல் மற்றும் ஆரவாரத்தின் அடையாளமாக” இருந்ததாகவும், உருப்படியான கொள்கை அல்லது செயல் திட்டம் இல்லை என்றும் விமர்சித்தார்.“அதிகாரத்தில் இருப்போரை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், அதையே அரசியல் கோட்பாடாக விஜய் வைத்திருக்கிறார்.
தவெகவில் ஆக்கப்பூர்வமான எந்தவொரு செயல் திட்டமும் இல்லை. விஜய் திமுக வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்,” என்று திருமாவளவன் கூறினார். தவெகவின் மாநாடு வெறும் சவடால்களால் நிறைந்திருந்ததாகவும், எந்தவொரு தெளிவான கொள்கை அல்லது தொலைநோக்கு திட்டமும் இல்லாததாகவும் திருமாவளவன் விமர்சித்தார்.
