சென்னை :நேற்று கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார மேடையில் அவர் பேசியது முழுக்க முழுக்க முன்னாள் அமைச்சரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது த.வெ.கவில் இணைந்துள்ள செங்கோட்டையன் மீதான கடுமையான விமர்சனங்களாகவே அமைந்தது. “இந்தத் தொகுதியை அதிமுகவின் கோட்டை என்று யாராவது கனவு காண்கிறார்களா? கோபிச்செட்டிபாளையம் என்றாலே அதிமுக தான். இங்கு அதிமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று கூறினார்.
மேலும், உறுதியாகக் கூறிய எடப்பாடி, செங்கோட்டையனை நேரடியாகக் குறிவைத்து பேசினார்.“வீடு வீடாக வந்து வாக்குக் கேட்டவர், திடீரென ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குப் போனார். ராஜினாமா செய்யும் போது மக்களிடம் அனுமதி கேட்டாரா? அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பாராட்டு விழாவுக்கு வரவில்லை. கேட்டால் ‘அம்மா படம் இல்லை, எம்.ஜி.ஆர் படம் இல்லை’ என்று சொன்னார். உண்மையில் காரணம் அதுவல்ல. இவரை அடையாளப்படுத்தியது அதிமுக தான். பதவி கொடுத்தது அதிமுக தான். இன்று மாற்றுக் கட்சிக்குப் போய்விட்டார். இவர் இனி உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? மக்களே சிந்தியுங்கள்” என்று எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
மேலும் அவர், “தூய்மையான ஆட்சி கொடுப்பேன் என்று இப்போது பேசுகிறார். அப்படியானால் நான் கொடுத்த ஆட்சி தூய்மையில்லையா? கட்சி துண்டு மாறிய பிறகு எல்லாம் மாறிப்போச்சு போலிருக்கே! எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். ஆனால் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கக் கூடாது” என்று மறைமுகமாக செங்கோட்டையனைச் சாடினார். கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், எடப்பாடியின் பேச்சுக்கு உற்சாக ஆரவாரமும் கைத்தட்டலும் எழுந்தது.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் செங்கோட்டையன். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல. அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். தேர்தலில் மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள்” என்று கூலாகக் கூறிவிட்டு சென்றார்.
