சென்னை :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளார். அக்டோபர் 31 அன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், செங்கோட்டையன் கட்சியின் ஒற்றுமை, ஒழுங்கு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும், நீக்கப்பட்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்டதால் கட்சியின் பெயரை கெட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இந்த நடவடிக்கை, கட்சியின் உள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.இன்று (நவம்பர் 1, 2025) ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில், செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், “அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது” என்று கூறி, கண்ணீர் கலந்த குரலில் பேசினார். “கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1, நான் திமுகவின் B டீம் அல்ல. யார் B டீம் என்பதை நாடு அறியும்” என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதற்கான விளக்கத்தை சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அளித்தார்.
இது குறித்து பேசுகையில் செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டதாகவும், பொதுக்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டினார். “பிரிந்து சென்றவர்களை செங்கோட்டையன் சந்திக்கவில்லை எனவும், அவர் சந்தித்தவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று தெரிவித்த அவர், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு ‘பி டீம்’ ஆக செயல்படுவதுதான் திட்டம் என்று குற்றம்சாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் தான் பங்கேற்றதாகவும், ஆனால் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று கூறி பங்கேற்கவில்லை என்றும் பழனிச்சாமி கூறினார். ஆனால், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றதாகவும், அங்கு கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்களே இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார். “சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம்?” என்று கேள்வி எழுப்பிய அவர், செங்கோட்டையன் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்பவர் என்று விமர்சித்தார்.
மேலும், செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் ‘சிற்றரசர்’ போல நடந்து கொண்டதாகவும், இப்போதுதான் அங்கு விடிவு கிடைத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு உண்மையாக இல்லை என்று கூறிய பழனிச்சாமி, இணைந்து பணியாற்றலாம் என்றபோது ஓபிஎஸ்க்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டதாகவும், அப்போதும் அவர் உண்மையாக இல்லை என்றும் தெரிவித்தார். “ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் இருவரும் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டதாகவும், தான் பொறுப்பேற்ற பிறகுதான் அவரை மீண்டும் அமைச்சராக்கியதாகவும் கூறினார்.
“திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் செங்கோட்டையன்” என்று குற்றம் சாட்டிய அவர், கட்சி தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா என்று கேள்வி எழுப்பினார்.டி.டி.வி.தினகரனை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியதாகவும், இவர்கள் அதிமுக பற்றி கருத்து கூற கூடாது என்றும் பழனிச்சாமி தெரிவித்தார். செங்கோட்டையன் கட்சி ஒற்றுமைக்காக பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று கூறுவதாகவும், ஆனால் அவர் சந்தித்தவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கினார். “சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்” என்று உறுதிப்படுத்திய அவர், இது கட்சி ஒழுங்கு நடவடிக்கை என்று தெரிவித்தார்.
