சென்னை :பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பிரச்சார நிகழ்ச்சியில் பேசினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு விதித்த வரியை குறைக்க முடிவு செய்ததைப் பெரிதும் பாராட்டிய அவர், “பிரதமர் மோடியைப் பார்த்து டிரம்ப் பயப்படுகிறார். அத்தகைய மாபெரும் தலைவராக மோடி விளங்குகிறார்” என்று கூறினார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்ததால் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. தேர்தல் வந்தால்தான் திமுகவினர் எட்டிப் பார்ப்பார்கள். ஆயிரம் ரூபாய் தருவோம் என்று ஆட்சிக்கு வந்து, நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் கொடுத்தார்கள்” என்று குற்றம் சாட்டினார். திமுகவின் ஒரே எண்ணம் மகனை முதலமைச்சராக்குவது என்றும் விமர்சித்தார்.
மேலும், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிய நயினார், “தமிழ்நாட்டில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று சிலர் சொல்கிறார்கள். கரூருக்கு வந்தவுடன் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடுகிறார். பிறகு செருப்பு ஈ வீசப்படுகிறது, விளக்கு அணைக்கப்படுகிறது, லத்தி சார்ஜ் நடக்கிறது” என்று கிண்டலடித்தார்.
தவெகவை குறிப்பிடாமல் விஜய்யை விமர்சித்தது கவனம் ஈர்த்தது.நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக தனித்தனியே இருந்ததால் தோல்வியடைந்ததாகக் கூறிய நயினார், “சேர்ந்திருந்தால் 25 இடங்களைப் பெற்றிருப்போம். இப்போது சேர்ந்துள்ளதால் 234 தொகுதிகளும் வெல்லும்” என்று உறுதி அளித்தார். “யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். திமுக ஒருபோதும் வரக்கூடாது” என்று கூறி பிரச்சாரத்தை முடித்தார்.
