விஜய் இன்னும் வளரவில்லை – சரத்குமார் ஸ்பீச்!

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் எனக் கூறும் அளவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வளர்ந்து விடவில்லை என பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பேசியுள்ளார் .

Featured image

மதுரை :நேற்று மதுரை மாவட்டத்தில் நடந்த த.வெ,க மாநாடு தான் இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. மாநாட்டில் த.வெ.க தலைவர் விஜய் பாஜகவுடன் நாம் ஏன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க வேண்டும்?. நாம் என்ன ஊழல் கட்சியா என்று மறைமுகமாக அதிமுகவையும் விமர்சித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து, விஜய் பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடியில் ஆகஸ்ட் 22, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், பாஜக முக்கிய பிரமுகருமான சரத்குமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்தார். “விஜய் இன்னும் ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அரசியலில் முழுமையாக வளரவில்லை,” என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “விஜய் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். இதுவே நல்ல அரசியலுக்கு அழகு,” என்று சரத்குமார் வலியுறுத்தினார்.

விஜய்யின் மதுரை மாநாட்டில் அவர் ஆற்றிய உரை மற்றும் தவெகவின் கொள்கைப் பாடல் வெளியீடு ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சரத்குமாரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் பேச்சுகளில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் தேவை என்று அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சரத்குமார், பாஜகவின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்தார். விஜய்யின் அரசியல் நுழைவு மற்றும் அவரது கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த கருத்து தவெகவுக்கு எதிரான அரசியல் விமர்சனமாகவும் பார்க்கப்படுகிறது.