சென்னை :நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பெண்களின் சுதந்திரம், சம உரிமை, பொருளாதார வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பேசிய அவர், “ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாக வாழ, உரிய ஊதியம் பெற, தொழில்முனைவோர்களாக மாற, எவ்வித அச்சமும் இல்லாமல் வாழ எனது தலைமையிலான திராவிட மாடல் உரிய கட்டமைப்புகளை உருவாக்கும்” என்று உறுதியளித்தார்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் வெளியே வர வேண்டும், உயர் பொறுப்புகளில் அவர்களும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பெண்களை சமூகத்தின் முதுகெலும்பாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.திமுக ஆட்சியில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர், “1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது யாரும் செய்யாத வரலாற்று சாதனை” என்று கூறினார். இந்தத் திட்டத்தை இதர மாநிலங்களும் பார்த்து பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும், இது தமிழ்நாட்டின் முன்மாதிரியான சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் இத்திட்டம், திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சமாக விளங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார்.மகளிர் உச்சி மாநாட்டில் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, இளம் பெண்களை கருப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இது பெண்களின் உடல்நலப் பாதுகாப்பை மேம்படுத்தும் முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, இளம் பெண்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் முயற்சி, ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். “பெண்கள் வலுப்பெறும்போது சமூகமே வலுப்பெறும்” என்ற கருத்தை முன்வைத்த அவர், திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையாக பெண் முன்னேற்றத்தை மையப்படுத்தியுள்ளதை வலியுறுத்தினார்.
உலக மகளிர் உச்சி மாநாட்டின் மூலம் தமிழ்நாடு பெண்களின் உரிமை மற்றும் வளர்ச்சிக்கான உலக அளவிலான முன்மாதிரியாக திகழ்கிறது என்பதை இந்நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் உரை, தமிழ்நாட்டின் பெண் மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இத்தகைய திட்டங்கள் மூலம் பெண்கள் அச்சமின்றி, சுதந்திரமாக, சமத்துவத்துடன் வாழும் சமூகத்தை உருவாக்குவதே திமுக அரசின் உறுதியான நோக்கம் என்று அவர் நிறைவாகக் கூறினார்.
