ஈரான் போரில் 1,255 பேர் பலி… 200 குழந்தைகள் உயிரிழப்பு!

தாக்குதல்களால் 29 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன இதில் 10 மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. 52 சுகாதார மையங்கள், 18 அவசர சிகிச்சை இடங்கள், 15 ஆம்புலன்ஸ்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன.

US-Israeli attacks

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தொடங்கி 10 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஈரான் தரப்பில் இருந்து பெரும் உயிரிழப்பு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. ஈரான் துணை சுகாதார அமைச்சர் அலி ஜஃபாரியான் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களால் 1,255 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் 200 குழந்தைகள் மற்றும் 11 சுகாதார பணியாளர்கள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின் வயது 8 மாதம் முதல் 88 வயது வரை உள்ளது.இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் என்று ஜஃபாரியான் வலியுறுத்தியுள்ளார். “அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவர்கள் அல்லது பணியிடத்தில் இருந்தவர்கள்” என்று அவர் கூறினார்.

மேலும் 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிபொருள் தீப்பற்றியதால் ஏற்பட்ட எரிபுண்கள் மற்றும் நசுக்கப்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதல்களால் 29 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. இதில் 10 மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. 52 சுகாதார மையங்கள், 18 அவசர சிகிச்சை இடங்கள், 15 ஆம்புலன்ஸ்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரானின் சுகாதார அமைப்பு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும், கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் முதல் முறையாக ஈரானின் எண்ணெய் வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது. தெஹ்ரானின் வடகிழக்கில் உள்ள அக்தாசியா எண்ணெய் கிடங்கு, தெற்கில் உள்ள தெஹ்ரான் சுத்திகரிப்பு நிலையம், மேற்கில் உள்ள ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கு ஆகியவை தாக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பெரும் தீயால் தெஹ்ரான் முழுவதும் கருப்பு புகை பரவியது. மதியம் வரை நகரம் இருட்டாக இருந்தது என்று ஜஃபாரியான் தெரிவித்தார்.

இந்த எண்ணெய் தாக்குதலால் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார். வீட்டிலேயே ஜன்னல்களை மூடிவைத்து இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அமில மழை பெய்வதால் மண் மாசுபடும் என்றும், நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார். “இது இராணுவ இலக்கு அல்ல, இது பொதுமக்கள் மீதான தாக்குதல்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்தப் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் ஈரானில் 200-க்கும் மேற்பட்ட நகரங்கள் தாக்கப்பட்டுள்ளன என்றும், பெரும்பாலான இலக்குகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் என்றும் ஜஃபாரியான் வலியுறுத்தினார். திங்கள்கிழமை (மார்ச் 9) வரை கோம் மற்றும் தெஹ்ரானில் வெடிப்புகள் தொடர்ந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இந்தப் போர் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.