ஹிகுவே : மத்திய அமெரிக்க நாடான டொமினிக்கன் குடியரசில் உள்ள ஹிகுவே நகரின் 'லா ரோமனா' சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட சொகுசு தனியார் பிசினஸ் ஜெட் விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
விமானம் தரையிறங்கும் போதே கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை விட்டு விலகி, கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கொடூர விபத்தில் விமானத்தின் உள்ளே சிக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான ஓட்டிகள் இருவரும் லா ரோமனா விமான நிலையத்தில் அவசர காலத் தரையிறக்கத்திற்கு (Emergency Landing) அனுமதி கோரி, ரன்வேயில் விமானத்தை பத்திரமாக இறக்க கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடியுள்ளனர்.
ஆனால், ரன்வேயில் சக்கரங்கள் தொட்ட அடுத்த சில விநாடிகளில் வேகம் கட்டுக்கடங்காமல் விமானம் பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதனால் விமானத்தின் இறக்கைகளில் இருந்த எரிபொருள் டாங்குகள் (Fuel Tanks) உடைந்து, தீப்பொறி பட்டு ஒட்டுமொத்த விமானமும் நொடிப் பொழுதில் ஒரு மாபெரும் நெருப்புப் பந்தாக மாறியது.
விபத்தின் போது ஏற்பட்ட அதிர வைக்கும் வெடிப்பு மற்றும் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை உலுக்கி வருகிறது.
விபத்து நடந்த அடுத்த கணமே விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிநவீன ரசாயன நுரைகள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடினர். இருப்பினும், தீயின் வேகம் மிக அதிகமாக இருந்தத காரணத்தால் விமானத்திற்குள் சிக்கியிருந்த இரண்டு விமானிகளையும் உயிரோடு மீட்க முடியாமல் போனது.
அமெரிக்கப் பதிவெண் கொண்ட இந்த பிசினஸ் ஜெட் விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்து டொமினிக்கன் குடியரசு வான்வழி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். விமானத்தில் ஏற்பட்ட திடீர் எஞ்சின் கோளாறா, லேண்டிங் கியர் அல்லது ஹிகுவே பிராந்தியத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமா என்ற பல கோணங்களில் அதிகாரிகள் தரவுகளைச் சேகரித்து வருகின்றனர்.
unknown node