“புதிய ஈரான் தலைவரையும் அழிப்போம்” – இஸ்ரேல் கடும் எச்சரிக்கை!

ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் படுகொலை உறுதி என இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

iran head

இஸ்ரேல் :மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 5-ஆம் நாளை எட்டியுள்ளது. இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணி ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ தளங்கள், எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை – டிரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக காமேனியின் மகன் மோஜ்டபா (Mojtaba Khamenei) தேர்வு செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் இந்தத் தேர்வுக்கு உடனடியாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹீப்ரூ மொழியில் வெளியிட்ட பதிவில், “ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி. அவரது பெயர் எதுவாக இருந்தாலும், எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.காட்ஸ் மேலும் கூறியதாவது: “இதற்காக அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான எந்த வாய்ப்பையும் நசுக்குவோம்.

ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிந்து புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்.” இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈரான் தரப்பில் இஸ்ரேலின் இந்த எச்சரிக்கைக்கு கடும் எதிர்வினை வெளியாகியுள்ளது. மறைந்த உச்ச தலைவர் காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர், “அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஈரான் விரும்பும் வரை போரைத் தொடரும்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஈரான் இந்தப் போரை தனது விருப்பப்படி தொடரும் என்று மீண்டும் உறுதியளித்துள்ளது.காமேனியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. காமேனியுடன் அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி கோஜஸ்தேஹ் பாகெர்ஸதேவும் உயிரிழந்தார்.

இந்த மோதல் தொடர்ந்து 5-ஆம் நாளை எட்டியுள்ளது. ஈரான் இன்று இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானின் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் பதிலடி தாக்குதல்கள் தொடர்கின்றன. உலக நாடுகள் இடைநிலை நடவடிக்கை எடுக்காவிட்டால் போர் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது. உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது.