“அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்” – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் பதில்!

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டம்

pedro sanchez and donald trump

ஸ்பெயின் :மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஸ்பெயின் அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி கோரியது. ஆனால் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளை முழுமையாக துண்டிப்போம் என்று அவர் மிரட்டினார். இந்த மிரட்டலுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று வலுவான உரையொன்றில் பதிலளித்தார்.“லட்சக்கணக்கான மக்களின் விதியுடன் ரஷ்ய ரூலெட் விளையாட முடியாது” என்று சான்செஸ் தனது உரையில் கூறினார்.

ஈரான் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியவர்களின் நோக்கங்கள் கூட தெளிவாக இல்லை என்றும், இப்போது என்ன நடக்கும் என யாருக்கும் உறுதியாகத் தெரியாது என்றும் அவர் எச்சரித்தார். அரசியல் பழிவாங்கல் பயத்தில் உலக அமைதிக்கு எதிரான செயல்களை ஆதரிக்க ஸ்பெயின் தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தினார்.மத்திய கிழக்கில் போர்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை மீறி விரிவடைவதாகவும், மனிதாபிமான நெருக்கடி, பொருளாதார அதிர்ச்சி, நீண்டகால உலக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் வரலாறு காட்டுவதாக சான்செஸ் சுட்டிக்காட்டினார்.

ஸ்பெயின் தனது தார்மீக நிலைப்பாட்டை உறுதியாக பாதுகாத்து வருவதாகவும், இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர மறுக்கும் நாடுகளுக்கும் முன்மாதிரியாக அமையும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.ஒட்டுமொத்தமாக, ஸ்பெயின் – அமெரிக்கா இடையேயான இந்த மோதல் ஈரான் மீதான தாக்குதல்களின் பின்னணியில் உருவானது. ஸ்பெயின் தனது சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையை உறுதியாக நிலைநாட்டியுள்ளது. இது அமெரிக்காவின் உலகளாவிய ராணுவ ஆதிக்கத்திற்கு எதிரான முக்கியமான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.