2023 உலகக்கோப்பை தோல்வியடைந்தவுடன் ஓய்வு பெற முடிவு எடுத்தேன்....வேதனையை உடைத்த ரோஹித்!

கிரிக்கெட்டே வேண்டாம் என நினைத்தேன் என 2023 உலக கோப்பை தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

Rohit Sharma sad

டெல்லி :மாஸ்டர்ஸ் யூனியன் (Masters’ Union) என்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்வியால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அவர் அளித்த உரை மிகுந்த உத்வேகத்தை அளித்தது.ரோஹித் சர்மா கூறியதாவது: “2022-இல் கேப்டன் பதவியை ஏற்றதிலிருந்தே எல்லாவற்றையும் உலகக் கோப்பை வெற்றிக்காகவே அர்ப்பணித்தேன்.

அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 2023 ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, என் ஒரே இலக்கு உலகக் கோப்பை வென்று தருவதுதான். ஆனால், அகமதாபாத்தில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தபோது முற்றிலும் மனமுடைந்துபோனேன். அந்த தோல்வி என்னிடமிருந்த எல்லா சக்தியையும், ஆற்றலையும் எடுத்துக்கொண்டது. என் உடலில் எந்த சக்தியும் இல்லை என்று உணர்ந்தேன். கிரிக்கெட் விளையாடுவதே வேண்டாம் என்று நினைத்தேன்” என்று தெரிவித்தார்.அந்த தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள 2 மாதங்கள் ஆனதாகவும், அந்த காலகட்டத்தில் மிகவும் கடுமையான நேரத்தை சந்தித்ததாகவும் ரோஹித் சர்மா விவரித்தார். “எல்லோரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

நான் தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமான நேரத்தை கடந்தேன். கேப்டனாக இருந்த காலம் முழுவதும் உலகக் கோப்பை வெற்றிக்காகவே உழைத்தேன். அது நடக்காதபோது முற்றிலும் உடைந்துபோனேன்” என்று அவர் கூறினார்.இருப்பினும், வாழ்க்கை அங்கு முடிவடையவில்லை என்ற உணர்வுடன் மீண்டு வருவதற்கு நிறைய சுய பரிசீலனை, உழைப்பு மற்றும் மன உறுதி தேவைப்பட்டதாக ரோஹித் குறிப்பிட்டார்.

“2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருந்தது. என் கவனத்தை அதில் செலுத்த வேண்டும் என்று தெரிந்தது. ஆனால் அந்த தருணத்தில் மிகவும் கடினமாக இருந்தது. மெதுவாக மீண்டு, மீண்டும் மைதானத்தில் ஆற்றலைப் பெற்றேன். இது எனக்கு ஏமாற்றத்தை எப்படி கையாள்வது, மீண்டும் தொடங்குவது, புதிய இலக்குகளை நோக்கி செல்வது என்பதற்கு பெரிய பாடமாக அமைந்தது” என்று அவர் விவரித்தார்.