கம்பீரை தூக்குறது சரியான வழி அல்ல...சொதப்பும் இந்தியாவால் டென்ஷனான அஸ்வின்!

பயிற்சியாளரால் பேட் எடுத்துக்கொண்டு களத்துக்கு போய் ஆட முடியாது என அஸ்வின் காட்டத்துடன் பேசியுள்ளார்.

gowtham gambhir Ravichandran Ashwin

சென்னை :இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 0-2 என்று தோல்வியடைந்த பிறகு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பிருக்கு எதிரான விமர்சனங்கள் கொந்தளிப்பாக எழுந்தன. குறிப்பாக குவஹாத்தி டெஸ்ட்டில் 408 ரன்கள் என்ற பெரும் தோல்வி ரசிகர்களையும் நிபுணர்களையும் கோபப்படுத்தியது. பலர் “காம்பிரை உடனே நீக்க வேண்டும்” என்று குரல் கொடுத்தனர்.

இந்தச் சூழலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூடியூப் நிகழ்ச்சி “அஷ் கி பாத்”ல் கம்பிருக்கு வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார்.“ஏன் இப்படி செய்கிறோம்? இது ஒரு விளையாட்டு. அணியை நிர்வகிப்பது அவ்வளவு எளிதல்ல. கம்பிரும் வலிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யாரையாவது பதவியிலிருந்து தூக்குவது நல்ல உணர்வைத் தரலாம், ஆனால் அது சரியான வழி அல்ல” என்று அஷ்வின் தெளிவாகக் கூறினார்.“

கம்பிர் எனக்கு உறவினர் இல்லை. நானும் 10 தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். தவறுகள் நடக்கும், யாராலும் நடக்கலாம். ஆனால் அது விலை உயர்ந்ததாக மாறும்போதுதான் பெரிதாகத் தெரிகிறது. பயிற்சியாளரால் பேட் எடுத்துக்கொண்டு களத்துக்கு போய் ஆட முடியாது” என்று வீரர்களின் பொறுப்பை நினைவூட்டினார்.

அஷ்வின் மேலும் கூறுகையில், “இந்திய கிரிக்கெட்டில் பொறுப்பை ஏற்க வீரர்கள் தயாராக இல்லை என்று தோன்றுகிறது. முடிவெடுக்கும் திறனில் குறை இருக்கலாம், ஆனால் தோல்விக்கு பயிற்சியாளரை மட்டும் குறை கூறுவது நியாயமில்லை. போதுமான வீரர்கள் பொறுப்பை ஏற்கவில்லை என்றுதான் எனக்குத் தெரிகிறது” என்றார்.“எப்போதும் ஒருவரைக் குற்றம் சாட்ட யாரையாவது தேடுகிறோம். தனிப்பட்ட தாக்குதல் எனக்குப் பிடிக்கவில்லை” என்று முடித்த அஷ்வின், கம்பிரை நீக்குவதற்குப் பதிலாக அணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.