சம்பவம் செய்த ரோஹித்...13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை சாதனை?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Hero Image

மும்பை : ஐபிஎல் 2026 சீசன் தொடக்கப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை.13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

கடைசியாக 2012-ஆம் ஆண்டு தொடக்கப் போட்டியில் வெற்றி பெற்றிருந்த MI அணி, இந்த முறை KKR-ஐ வீழ்த்தி பழைய பெருமையை நினைவுபடுத்தியது.முதலில் பேட்டிங் செய்த KKR அணி, அஜிங்க்யா ரஹானே (67 ரன்கள்), ஃபின் அலன் (37 ரன்கள்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (51 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 220 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.

221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோஹித் சர்மா மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 78 ரன்கள் (6 சிக்ஸர்கள் உட்பட) எடுத்த அவர், தனது 50-வது ஐபிஎல் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் 23 பந்துகளில் அரைசதம் அடித்து தனது வேகமான அரைசத சாதனையையும் புதுப்பித்தார்.

ரோஹித் சர்மாவுக்கு ரயான் ரிக்கெல்டன் (81 ரன்கள்) சிறப்பான துணையளித்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் எட்டிப்பிடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. ரோஹித் சர்மா தனது 550-வது T20 சிக்ஸரையும் அடித்து தனது சாதனைப் பட்டியலை மேலும் விரிவுபடுத்தினார். ஒட்டுமொத்தமாக, ஐபிஎல் 2026-இன் முதல் போட்டியே ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் அதிரடியான தொடக்கத்தை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு ரோஹித் சர்மா தனது உடல் எடையை குறைத்து கொண்டு மீண்டும் பழைய ஹிட் மேனகா வந்துள்ள காரணத்தால் அவருடைய பேட்டிங் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் பவுண்டரி என விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.