திலக் வர்மா வேற லெவல்...புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்!

அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும்  மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள் என சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.

sunil gavaskar tilak varma

துபாய் :ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், செப்டம்பர் 21, 2025 அன்று டுபாய் அரங்கத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 171/8 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இந்தியா, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வென்றது. தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (74 ரன்கள், 39 பந்துகள்) மற்றும் சுப்மன் கில் (47 ரன்கள்) 105 ரன் கூட்டணி அமைத்து அணியை வழிநடத்தினர். திலக் வர்மா (30* ரன்கள், 19 பந்துகள்) இறுதியில் சிக்ஸருடன் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (3/19) சிறப்பாக வீசினார். முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்த வெற்றியை பாராட்டி, வீரர்களை புகழ்ந்து பேசினார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் “அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பேட்டிங் பற்றி என்ன சொல்ல இருவரும்  மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்கள் பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு அபாரமாக விளையாடினர்,” என்று கவாஸ்கர் கூறினார்.

அவர்களை போலவே, கடைசி நேரத்தில் கவாஸ்கர், திலக் வர்மாவின் இறுதி பங்களிப்பை வியந்து பாராட்டினார். “இறுதியில், சூப்பர் திறமையான பேட்ஸ்மேன் திலக் வர்மா, பாகிஸ்தானின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியை ‘நெட் பந்துவீச்சாளர்’ போல் சமாளித்து, அவரை அடித்து வெற்றியை உறுதி செய்தார். பந்துகள் மீதமிருக்கையே வென்றது அபாரம்,” என்று கூறினார். திலக் 19 பந்துகளில் 30* ரன்கள் (சிக்ஸர், பவுண்டரி) அடித்து, போட்டியை முடித்தார்.

அபிஷேக், முதல் பந்தை ஷஹீன் அப்ரிடியின் குறுகிய பந்தை எதிர்பார்த்து ஹூக் செய்து சிக்ஸருக்கு அடித்ததை கவாஸ்கர், “அபிஷேக் மனதளவில் பந்துவீச்சாளரை வென்றார். இந்த இளம் வீரருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது,” என்று பாராட்டினார். மேலும், இந்த வெற்றி, இந்திய அணியை சூப்பர் 4-இல் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் வைத்தது. பாகிஸ்தான் 0 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.