உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்.!

கனமழையைத் தொடர்ந்து சாமோலி மாவட்டத்தின் நந்தநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

Chamoli - cloudburst

சமோலி :உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், நந்தாநகர் என்ற இடத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 17) இரவு திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, நந்தநகரில் இன்று (செப்டம்பர் 18, 2025) அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர் .

கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த மேகவெடிப்பு, நந்தாநகர் காட் பகுதியில் உள்ள குன்த்ரி லகாஃபலி வார்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 6 வீடுகள் மண் சரிவில் புதைந்தன, மேலும், துர்மா கிராமத்திலும் அதிகமான சேதம் ஏற்பட்டது, அங்கு வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டன.

தேசிய பேரிடர் பிரதிநிதி படை (NDRF) மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அணி (SDRF) தளவாடம் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், தொடர்ந்து மழை பெய்வதால் மற்றும் சாலைகள் சேதமடைந்ததால் மீட்பு பணிகள் தடைபட்டுள்ளன. மேலும்,   கனமழையைத் தொடர்ந்து டேராடூனில் இருந்து பிரபலமான மலைவாசஸ்தலத்திற்குச் செல்லும் சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டதால் சுமார் 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர்.

இது தொடர்பாக, சமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி கூறுகையில், “நந்தாநகர் காட் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் 6 வீடுகள் மண் சரிவில் புதைந்தன. 7 பேர் தொலைந்துள்ளனர், 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, காணாமல் போனவர்கள் குன்வர் சிங் (42), அவரது மனைவி காந்தா தேவி (38) மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் விகாஸ் மற்றும் விஷால் (இருவரும் 10 வயது), நரேந்திர சிங் (40), ஜகதாம்பா பிரசாத் (70) மற்றும் அவரது மனைவி பாகா தேவி (65), தேவேஸ்வரி தேவி (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் சமோலி, டெஹ்ரா தூன், சம்பவத், உதம் சிங் நகர், தெஹ்ரி கர்வால், பவுரி கர்வால், பித்தோராகர், சமோலி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20 வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.