பீகார் :சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்த நிலையில், தேஜஸ்வி 1,18,597 வாக்குகளுடன், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 1,04,065 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால், 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். இது அவரது குடும்பத்தின் அரசியல் கோட்டையான ரகோபூரை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் வெற்றியாக அமைந்துள்ளது.
காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்ப சுற்றுகளில் தேஜஸ்வி பின்னடைவைச் சந்தித்தார். 10-11 சுற்றுகளில் சதீஷ் குமார் 4,000-க்கும் மேல் வாக்குகள் முன்னிலை வகித்தார். 16-ஆவது சுற்றில் பின்னடைவு 9,000-ஐத் தொட்டது. ஆனால், 19-ஆவது சுற்றிலிருந்து தேஜஸ்வி மீண்டும் முன்னிலை பெற்று, 23-ஆவது சுற்றில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தை அடைந்தார்.
இந்த நெருக்கடியான போராட்டம், தொகுதியின் 68.54% வாக்குப் பதிவை பிரதிபலிக்கிறது.ரகோபூர் தொகுதி, வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது, லாலூ பிரசாத் யாதவின் குடும்பத்தின் பாரம்பரிய இடமாக உள்ளது. 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தேஜஸ்வி 38,000-க்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இம்முறை, மகா கட்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தாலும், NDA-வின் கடுமையான போட்டியை எதிர்த்து வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி, MGB-வின் மொத்த தோல்வியிலும் RJD-வுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. NDA 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றாலும், தேஜஸ்வியின் வெற்றி அவரது தலைமையை வலுப்படுத்தும். அவர் வெற்றிபெறுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
