தவெக 100 கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்.., மாநாட்டு திடலில் அதிர்ச்சி.!

மதுரையில் விறுவிறுப்பாக தயாராகி வரும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டு அரங்கில் 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது.

TVK Madurai Maanadu

மதுரை :மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டு திடலில், 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்படும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முயற்சிக்கும்போது, கயிறு அறுந்ததாலும், போல்ட்கள் சரியாக பொருத்தப்படாததாலும் கம்பம் சாய்ந்து விழுந்தது.

இதில், அருகில் இருந்த ஒரு கார் அப்பளம்போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஓடிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் தவெக தலைவர் விஜய் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக கொடி ஏற்றவிருந்தார். கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்று ஏற்பாடுகள் குறித்து தவெக பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.