நெல்லை :மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது என்று குற்றம்சாட்டினார். “ஒருநாளும் உதயநிதி முதல்வராக முடியாது, ராகுல் காந்தி பிரதமராகவும் வர முடியாது,” என்று கூறிய அவர், செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் சிறையில் இருந்தவர்கள் ஆட்சியில் இருப்பதை கேள்வி எழுப்பினார். மேலும், 130-வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும், திமுகவை “இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி” எனவும் விமர்சித்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துகளுக்கு, திமுக எம்.பி. ஆ. ராசா கடுமையான பதிலடி கொடுத்தார். “வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது. எங்களுக்கான முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து வருவார், ஆனால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்து வருவார்கள். 130-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா, பாஜகவின் அரசியல் எதிரிகளை மிரட்டி, தன்னால் ஆள முடியாத மாநில அரசுகளை முடக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும், பாஜகவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது,” என்று ஆ. ராசா தெரிவித்தார்.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மீது கேள்வி எழுப்பிய ஆ. ராசா, “ஜெய் ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரானார்? அவரது கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்களா? மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சராகலாம். தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை அமித் ஷா முடிவு செய்ய முடியாது,” என்று கடுமையாக விமர்சித்தார்.
ஆ. ராசாவின் இந்த பதிலடி, அமித் ஷாவின் கருத்துகளுக்கு எதிராக திமுகவின் தீவிரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மேலும் அவர் பேசுகையில் “அமித் ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல,” என்று கூறி, திமுகவின் ஆட்சி மக்கள் ஆதரவுடன் உறுதியாக உள்ளதாகவும், பாஜகவின் அரசியல் உத்திகளுக்கு தமிழ்நாடு அடிபணியாது என்றும் ஆ. ராசா வலியுறுத்தினார்.
