நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்து நீண்ட பட்டியலை முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார்.

Tamilnadu CM MK Stalin speech in TN Assembly

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பான மானிய கோரிக்கைகள் மீது அத்துறை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, இதுவரை நடைபெற்ற மானிய கோரிக்கைகள் அதற்கான பதில்கள் மீதான பதிலுரையை பேரவையில் கூறினார். அப்போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என நீண்ட பட்டியலை அவர் வாசித்தார். அதில், திமுக ஆட்சிக்கு 6வது முறையாக வந்துள்ளது. தான் பொறுப்பேற்ற மே 7க்கு இன்னும் 7 நாட்கள் தான் இருக்கிறது. இதுவரை செய்த சாதனைகளை அடுத்து 7வது முறையும் திமுக ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமையும்.

மேலும் அவர் பேசுகையில், ஸ்டாலின் என்றால் உழைப்பு என கலைஞர் முன்பு கூறியது போல, கலைஞர் இருந்திருந்தால் இப்போது ஸ்டாலின் என்றால் சாதனை என சொல்லி இருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனை மனதில் வைத்து தான் நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள், அந்த செயலினால் கிடைத்த சாதனை தான் இவை.

கடந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டினால் தமிழ்நாடு தட்டாந்தரையில் ஊர்ந்த்து கிடந்தது. அதனை நமது ஆட்சியில் தலைநிமிர செய்துள்ளோம். இது சின்ன சாதனை அல்ல. கடும் உழைப்பால் வந்த சாதனை. இந்தியாவின் எந்த மாநிலமும் செய்யாத சாதனை. தமிழ்நாடு அடைந்த உயரத்தின் அளவை தற்போது பட்டியலிட உள்ளேன். என கூறி நீண்ட பட்டியலை வாசித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2024 – 2025 ஆண்டில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக, 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது தமிழ்நாடு. இதுவரை தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி கண்டதில்லை, இது மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறியது இந்தியாவின் பொருளாதர வளர்ச்சியே 6.5 விழுக்காடு தான்.

தமிழ் ஜிஎஸ்டிபி ரூ.17,23,698 கோடி ஆகும். தனிநபர் வருமானம் 2024 – 2025 ஆண்டில் 3.58 லட்சம் ஆகும். ஆனால், இந்திய அளவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2.06 லட்சம் ஆகும்.

2024 – 25 ஆண்டில் 14.65 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதில் 49.23 விழுக்காடு ஆகும்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வணிக வரியாக வந்துள்ளது.

அகில இந்திய அளவில் பள்ளிக்கூடங்களில் 50% அளவு மட்டுமே அறிவியல் ஆய்வு கூடங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 98.3 விழுக்காடு வசதி தமிழ்நாடு பள்ளிகளில் உள்ளது.

நமது கல்வித்திட்டம் மூலம் தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றலே இல்லை.

இந்திய அளவில் 28.4 விழுக்காடு தான் உயர்கல்வி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 47 விழுக்காடு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தான் பிஎச்டி பயிலும் மாணவர்களை எண்ணிக்கை அதிகம்

சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை. 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

நிதி ஆயோக் அறிவிப்பின் படி, நிலையான வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்ற குறியீடு 63 விழுக்காடு ஆகும்.

வறுமைக்கோட்டில் இந்திய அளவில் 11.2 விழுக்காடு மக்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4 விழுக்காடு பேர் தான் வறுமை கோட்டிற்கு கிழே உள்ளனர்.  அவர்களையும் உயர்த்த தாயுமானவர் திட்டம் மூலம் உழைத்து வருகிறோம்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.27 கோடி பயனர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை ஐநா பாராட்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அளித்த தரவின்படி உயர் அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தான் மருத்துவ கல்லூரி சீட் மற்றும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அரசு மருத்துவமனைகளில் 1.16 லட்சம் மருத்துவ படுக்கைகள் உள்ளன.

தொழித்துறையை பொறுத்தவரை 39,626 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.  அதில் 27.75 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 5.35 லட்சம் கோடி வருவாய் ஈட்டி இந்தியா அளவில் 2ஆம் இடத்தில் உள்ளது.

தொழிற்சாலையில் பெண்கள் 40 விழுக்காடு பணியாற்றி வருகின்றனர்.

காற்றாலையில் 2ஆம் இடம், சூரிய சக்தியில் 4ஆம் இடம், புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்குவதில் முதலிடம்,  தோல் – ஜவுளியில் முதலிடம, எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை கரும்பு உற்பத்தியில் முதலிடம்,  மக்கா சோளத்தில் 2ஆம் இடம், நெல் உற்பத்தியில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.

ஊட்டச்சத்து எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.

இந்தியா அளவில் காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகரிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம்.

இதனை சாதாரணமாக செய்திடவில்லை. மேலே பாம்பு , கிழே நரிகள் , ஒரு பக்கம் மத்திய அரசு, இன்னொரு பக்கம் ஆளுநர் , மறுபக்கம் நிதிநிலை இதன் நடுவே தான் இந்த சாதனையை செய்துள்ளோம். இது தனிநபர் சாதனை இல்லை. இது கூட்டு முயற்சி. இது கொள்கை ரீதியிலான அரசு. முந்தைய ஆட்சி காலத்தை காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, எனக் கூறுவது போல இது திராவிட மாடல் ஆட்சி என நான் குறிப்பிடுகிறேன். என கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சி சாதனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட பட்டியலாக கூறினார்.