நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு தணிக்கைச் சான்றிதழ் தாமதம் ஏற்பட்டு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் படத்திற்கு வலுவான ஆதரவு குரல் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர், மத்திய அரசின் தணிக்கை வாரியம் அரசியல் நோக்கத்துடன் தடை விதிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கருத்துச் சுதந்திரத்தை மீறும் இத்தடை தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி தனது வலைப்பதிவில், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியமும் மத்திய அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தலுக்கான கருவிகளாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆதரவு குரல்கள் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், காங்கிரஸ் கட்சி ‘ஜனநாயகன்’ படத்தை ஆதரிப்பது போல் தோற்றமளித்தாலும், அது தூண்டில் போடுவது போன்றது என்று குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியை நம்ப வேண்டாம் என்றும், அவர்கள் பேரம் பேசுவதற்காக மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.விஜய் பிரபாகரன் மேலும் கூறுகையில், விருதுநகரில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பது தனக்கு தெரியும் என்றும், அவர்கள் கூட்டணிக்கு வருவது போல் வந்து பேரத்தை உசுப்பிவிட்டு, இப்போதுள்ள இடத்திலேயே இருப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
மேலும், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், நல்லதுக்காகவே இதைச் சொல்வதாகவும் வலியுறுத்தினார்.இந்தக் கருத்து தேமுதிக தரப்பில் இருந்து ‘ஜனநாயகன்’ படத்திற்கு வந்துள்ள முதல் கடுமையான விமர்சனமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவு மற்றும் தேமுதிகவின் எச்சரிக்கை ஆகியவை தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.
