சென்னை :முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளில் மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”விடியல் பயணத்தில் தினசரி சராசரியாக 65 லட்சம் பேர் பயணம். 3,700 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன. 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 45,000 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
7400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.7,658 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 4500 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. 76 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514ஆக அதிகரித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10.28 லட்சம் முதலீடு ஈக்கப்பட்டுள்ளது, 32 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
3 லட்சம் பேருக்கு நான் முதல்வன் உள்ளிட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை 9% உயர்ந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவது 98%-ஆக உயர்ந்துள்ளது. ரூ.6,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 235 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பட்டியலிட்டு பேசியிருக்கிறார்.
