ஒப்பந்த செவிலியர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதாதான் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

செவிலியர்கள் போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராடுவது என்பது அவரவர்களின் உரிமை என கருத்து தெரிவித்துள்ளார்.

ma supramaniam

சென்னை :கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாம் நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம், ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர வேலை, ஓய்வூதிய உரிமை, பணி நிலைமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவோடு இரவாக பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்து, வெயில், மழை என எந்த விதமான வானிலை மாற்றங்களையும் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. செவிலியர்கள் தரப்பில், அரசு தங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், நீண்டகாலமாக கோரிக்கைகள் கோரப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒப்பந்த செவிலியர் மற்றும் பணியாளர் முறையை முதலில் கொண்டு வந்தது ஜெயலலிதா தலைமையிலான அரசுதான். அதன்பிறகு பல்வேறு ஆட்சிகளில் இந்த முறை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. போராடுவது என்பது அவரவர்களின் அரசியல் உரிமை. அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை விடாமல் வலியுறுத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும், ஊதியத்தில் சமத்துவம் வேண்டும், பணி நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்தப் போராட்டம் தொடரும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் கூட்டம் காணப்படுவதால், பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதால், அரசு எப்போது பதில் அளிக்கும் என்பது இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.