சென்னை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அன்று வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்ததால், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், ஆகஸ்ட் 24 அன்று உணவு உட்கொள்ளும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தலையில் காயம் இல்லை என உறுதிப்படுத்தியபோதும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தார். மருத்துவர்கள், நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
