திமுகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர் – ஓபிஎஸ் விளக்கம்.!

திமுகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

O Panneerselvam - mk stalin

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் சிறிதும் அரசியல் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவில் இணைவதாக வெளியாகும் வதந்திக்கும் பதில் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவரது அறிக்கையில், ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் ‘B’ Team என்றும், நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர். ஊடகங்களும் கற்பனையாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகு குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். முதலமைச்சருடனான சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு.  திமுக உடன் கூட்டணி வைக்கப்போவதாக வெளியாகும் தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்தவித அரசியலும் இடம்பெறவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதற்கான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் முதல்வரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக் கூடியவன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.