“விஜய் வீட்டு வாசல் தட்டும் பழனிசாமி” – ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்காகவும் கூட்டணிக்காகவும் நடிகர் விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் என ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

o panneerselvam AND EPS

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) இடையே கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பிலான திமுக பிரசாரக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்காகவும் கூட்டணிக்காகவும் நடிகர் விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.பழனிசாமியும், டி.ஜெயக்குமாரும் (உதயகுமார்) சேர்ந்து அதிமுகவை குழி தோண்டிப் புதைத்து விட்டனர்” என்று குற்றம்சாட்டினார்.

ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியதாவது, “எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய பெருமை ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு உள்ளது. 9 அமைச்சர்களை ஜெயலலிதா நீக்கியபோது நான் தடுத்தேன். என் ஆதரவால் தான் எடப்பாடி நான்கரை ஆண்டுகள் பதவியில் இருக்க முடிந்தது. அந்த நன்றி கூட இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ஈடுபட்டார்” என்று குற்றம் சாட்டினார்.

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து ஓ.பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றியது, கட்சியில் அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தது என் மிகப்பெரிய தவறு. டெல்லியில் உள்ளவர்கள் இங்கு வந்து பேசுகின்ற நிலைமையை மாற்றி, டெல்லி சென்று அவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அடிமையாகி உள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.இந்த விமர்சனம் அதிமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக தரப்பு ஆர்வம் காட்டுவதாக பேசப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து கட்சியின் உள் பிளவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.