சென்னை :இன்று (நவம்பர் 6, 2025) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) நிர்வாகிகள் கூட்டம் நடத்தும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) இடையேயே முக்கிய போட்டி நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, நேற்று நடைபெற்ற த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் விஜய் திரும்பவும் சொல்கிறேன் 2026 தேர்தலில் இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி ஒன்னு த.வெ.க. இன்னோன்னு திமுக என்று கூறியிருந்தார். எனவே, இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் ” நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி வலுவாக இருந்தால் கடுமையான போட்டி ஏற்படும் என்றும் கூறினார். “திமுக எதிராக போராடும் கட்சி த.வெ.க தான். அதிமுக இன்று த.வெ.க இடத்தில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.டிடிவி தினகரன், அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் திமுகவில் இணைவதை வருத்தமாகக் கருதினார்.
குறிப்பாக, முன்னாள் அதிமுக தலைவர் மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்தது துரதிஷ்டமானது என்று கூறினார். “மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணம். அதிமுகவில் இருந்து பலர் தொடர்ந்து திமுக செல்கின்றனர், ஏனெனில் அவர்கள் பழனிச்சாமியை நீக்குவதற்கு திமுகவே சரியான இடம் என்று நம்புகின்றனர்” என்று விமர்சித்தார். அமமுகவைப் பொறுத்தவரை, திமுக அளவுக்கு பெரிய கட்சி இல்லை என்றும், பழனிச்சாமியை வீழ்த்த சரியான இடம் அமமுக என்றும் அவர் வலியுறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தகுதியின்மையை டிடிவி தினகரன் கடுமையாகக் கண்டித்தார்.
“பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்ல முடியாது. அவரது செயல்பாடுகள்தான் திமுகவை வலுப்படுத்துகின்றன. பழனிச்சாமியை தலைமை பொறுப்புக்கு தகுதியில்லாமல் செயல்பட வைத்தது தவறு. அவரது கூட்டணி நிச்சயம் வெல்லாது, மூன்றாவது இடம் தான் பொருந்தும்” என்று தினகரன் தெரிவித்தார். ஈ.பி.எஸ்-இன் செயல்பாடுகள் திமுக பலமாக இருக்க காரணம் என்றும் அவர் சாடினார். கூட்டணி குறித்து பல கட்சிகள் தன்னை அணுகியுள்ளதாகவும், ஆனால் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து “வெற்றிக் கட்சியுடன் தான் எனது கூட்டணி இருக்கும். கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னை அணுகினார்கள், ஆனால் இன்னும் முடிவு இல்லை” என்று கூறினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவை என்ற கேள்விக்கு, “தேர்தலுக்கு பின் SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்தலாம்” என்று பதிலளித்தார். SIR படிவத்தில் சில கேள்விகள் புரியாத வகையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
