நெல்லை :மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக குறித்து விமர்சனம் செய்து உரையாற்றினார். மாநாட்டில் பேசிய அவர் “தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாரம்பரியம், கலாசாரம், வீரம் மிகுந்த தமிழக மண்ணை வணங்கி என் உரையை தொடங்குகிறேன்,” என்று கூறி தனது பேச்சை ஆரம்பித்தார்.
அவர் தனது உரையில், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, “முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை தமிழக முதல்வராக்குவது. சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்க விரும்புவது போலவே இதுவும் உள்ளது. ஆனால், நான் உறுதியாக சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி முதல்வராகவோ, ராகுல் காந்தி பிரதமராகவோ வர முடியாது,” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
திமுகவை “இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் செய்த கட்சி” என விமர்சித்த அமித் ஷா, “போக்குவரத்து ஊழல், ஊட்டசத்து பொருட்களில் ஊழல், மணல் ஊழல் என திமுக ஆட்சியில் ஊழல்கள் தொடர்கின்றன. செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தவர்கள். இவர்கள் ஆட்சியில் இருக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 130-வது சட்ட முன்வடிவு குறித்து பேசிய அவர், “இந்த மசோதாவை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இதை கருப்புச் சட்டம் என சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த மசோதா, கடுமையான குற்றச்சாட்டுகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வகை செய்கிறது,” என்று விளக்கினார்.
வரும் 2026 தேர்தலில் திமுகவை “வேருடன் அகற்ற வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த அமித் ஷா, “இந்தியா கூட்டணி கனவு காண்கிறது. ஆனால், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவது உங்கள் கையில் உள்ளது. வெற்றிக்கான முன்னெடுப்பை தொடங்குங்கள்,” என்று உற்சாகப்படுத்தினார். மேலும், “வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்,” என்று உறுதியளித்தார். நெல்லை மாநாட்டில், பாஜகவின் களப்பணிகளை தீவிரப்படுத்தவும், அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உழைக்கவும் தொண்டர்களை அவர் அறிவுறுத்தினார். “தமிழக மக்களின் நம்பிக்கையை வெல்ல இந்த வெற்றியை உங்களால் கொண்டு வர முடியும்,” என்று கூறி, மாநாட்டை முடித்தார்.
