சென்னை :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடந்த மக்கள் கூட்டத்தில் பேசுகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக, “களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டுதான் களத்திற்கு வந்துள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.சீமான் கூறியதாவது: “கட்சி ஆரம்பித்துவிட்டு, ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் நின்றிருக்கலாமே? களத்தில் யார் இருக்கிறார்கள்? அவர் (விஜய்) பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டு கடக்க வேண்டும்” என்று வினவினார்.
மேலும், “த.வெ.க. வைத்திருக்கும் தலைவர்களுக்காக ஓட்டு இல்லை. அதிமுக-வில் எம்ஜிஆர், திமுக-வில் கருணாநிதி கொடியில் வைத்திருக்கிறார்கள் என்றாலும் ஓட்டு அவர்களுக்காக இல்லை. குடுக்குற நோட்டுக்குத்தான் ஓட்டு. அப்படின்னா காந்தி நோட்டுக்குத்தான் ஓட்டு” என்று சீமான் கடுமையாக சாடினார்.தேர்தல் களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது தான் நகைச்சுவை என்று சீமான் விமர்சித்தார்.
மேலும், த.வெ.க. தங்களின் கொள்கை எதிரி என்று கூறும் பாஜக-வை வீழ்த்துவதற்காக விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இவ்வாறு சீமான், விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டையும், தேர்தல் களத்தில் ஈடுபடாததையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழக அரசியலில் தற்போது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
