அதிமுகவை தொட்டா விடமாட்டோம் – விஜய்க்கு ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் குற்ற உணர்வின்றி நடனமாடுகிறார் விஜய் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

tvk vijay d jayakumar

சென்னை :தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று மீண்டும் விமர்சித்ததால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி விழாவில் பேசிய விஜய், அதிமுகவை பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தை அடகு வைப்பதாகவும், ஊழல் சக்திகளுடன் இணைந்துள்ளதாகவும் கடுமையாக சாடினார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜய்யின் நடனம், சம்பளம், கட்சி நிதி உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.ஜெயக்குமார் பேசுகையில், “விஜய் வாங்கும் சம்பளத்தில் கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு. விஜய் வாங்கிய சம்பளத்தை வெளியே சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையன் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசலாமா என்றும், விஜய் தனது சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்லட்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இப்படிப்பட்ட திருடர்களின் முகத்திரையை அதிமுகவினர் கிழிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.அதிமுகவை விமர்சிக்கும் விஜய்யின் கட்சி நிதி குறித்து ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

“ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார். செங்கோட்டையன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேசுவது எப்படி என்று கேள்வி எழுப்பினார். தவெகவினர் ஆபத்தில் இருப்பதால் தங்களை காப்பாற்ற விசில் அடிக்கின்றனர் என்றும் அவர் கிண்டலடித்தார்.

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் விஜய் குற்ற உணர்வின்றி நடனமாடியதை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். “விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்” என்று கூறிய அவர், போட்டி என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் என்று தெரிவித்தார். அதிமுகவை தொட்டால் யாராக இருந்தாலும் விடமாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.