காசா போர் விரைவில் முடிவு? பிணைக்கைதிகள் விரைவில் ரிலீஸ் – டிரம்ப் அறிவிப்பு!

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் கட்ட அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

israel gaza war

வாஷிங்டன் :எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தயாரித்த போர் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பாடு அடைந்துள்ளன. இந்த அறிவிப்பு அக்டோபர் 8, 2025 அன்று வெளியானது. காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் அடியாக இது கருதப்படுகிறது.

கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டன. இந்தப் பேச்சு, இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் போருக்கு முடிவு கொண்டுவரும் என்று நம்பிக்கை அளிக்கிறது.உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்: இஸ்ரேல் தனது ராணுவப் படைகளை காசாவிலிருந்து ஒரு ஒப்பந்தப்படியான வரம்புக்குள் திரும்பப் பெறும். இதோடு, இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். ட்ரம்பின் 20 அம்சங்கள் கொண்ட செயல் திட்டத்தின் முதல் கட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஹமாஸ், இந்தத் திட்டத்தை ஏற்கிறோம் ஆனால் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று கூறியுள்ளது. இது போரை நிறுத்தும் முதல் பெரிய அடியாகும்.ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளத்தில் இதைப் பற்றி பதிவிட்டுள்ளார். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நமது அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இஸ்ரேல் படைகளை ஒப்பந்த வரம்புக்கு திரும்பப் பெறும். இது வலுவான, நீடித்த அமைதிக்கான முதல் படிகள்” என்று அவர் எழுதியுள்ளார்.

அரபு உலகம், இஸ்ரேல், அண்டை நாடுகள், அமெரிக்காவுக்கு இது பெரிய நாள் என்றும், அமைதி செய்தவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார். மேலும், காசா போர் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலுடன் தொடங்கியது. அப்போது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், பலர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்தியது. இப்போது இரண்டாவது ஆண்டு நிறைவடையும் நேரத்தில் இந்த உடன்பாடு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.