புதினைத் தொடர்ந்து டிரம்ப்புடன் ஜெலன்ஸ்கி இன்று பேச்சுவார்த்தை.!

வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று (ஆக. 18) சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இந்த சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Zelensky - Trump

சென்னை :அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று வாஷிங்டனில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போர், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தார், ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்றைய சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களான உர்சுலா வோன் டெர் லியென், பிரெட்ரிக் மெர்ஸ், கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்டோரும் பங்கேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், ரஷ்யாவின் நிபந்தனைகளான டோன்ஸ்க் பகுதியை ஒப்படைப்பது மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணையாமல் இருப்பது போன்றவை ஏற்க முடியாதவை என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ட்ரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே முத்தரப்பு சந்திப்பு நடத்தப்படுவதற்கான சாத்தியமும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது, ஆனால் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே காரசார விவாதங்கள் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.