டெல்லி :வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து, இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
2024 லோக்சபா தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டே பாஜக ஆட்சிக்கு வந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இந்த பேரணியை முன்னெடுத்துள்ளார். வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்துள்ளனர்.
பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், எம்.பி.க்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராகுல் காந்தி, இது அரசியல் போராட்டமல்ல, மாறாக அரசியலமைப்பையும் ஒரு நபர்-ஒரு வாக்கு என்ற கோட்பாட்டையும் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்று கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் வெளிப்படையான டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்லி காவல்துறையினர், பேரணிக்கு முறையாக அனுமதி கோரப்படவில்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும், 30 எம்.பி.க்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதிக எண்ணிக்கையில் பங்கேற்றதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரணி மற்றும் கைது நடவடிக்கைகள் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இது தொடர்பாக பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.
