அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; பிரதமர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

நரேந்திர மோடி அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps and modi

சென்னை :மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல் பரப்புரைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆற்றிய உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து பேசிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஒரு குடும்பம் வாழ, எட்டு கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த திமுக ஆட்சி தேவையா? திமுக தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்களை மத்திய அரசு வழங்கியதாகவும், திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.பிரதமர் மோடி மேடைக்கு வருகை தந்ததை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவே மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது; பிரதமர் என்ன பேசப்போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

பிரதமர் இந்த மண்ணில் கால் வைத்த உடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். இந்த வார்த்தைகள் கூட்டத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தின.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பெருமதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களே… சகோதரர் டிடிவி அவர்களே” என்று மரியாதையுடன் அழைத்தார்.

“தயக்கம், குழப்பம், அழுத்தம் இல்லாமல் அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளது; அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுள்ளோம்; நானும் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் தொண்டர்கள்” என்று டிடிவி தினகரன் பேசியதை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக வரவேற்றார்.

எடப்பாடி பழனிசாமி தனது உரையைத் திருக்குறளுடன் நிறைவு செய்தார் “ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். உரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே கையில் அடக்கலாம் என்பது இந்த குறளின் பொருள். நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் உரிய காலத்தில் உரிய இடத்தில் உரியவர்களோடு ஒன்றிணைந்து உறுதியாக செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். அத்தகைய தருணம் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.” இந்த உரை கூட்டத்தில் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.