சென்னை :சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வரும் போராட்டம், மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு நடைபெறுகிறது, மேலும் சுமார் 2000 பணியாளர்கள், குறிப்பாக ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் (5 மற்றும் 6-வது மண்டலங்கள்) பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இந்த நிலையில், மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு, மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் 13 நாட்களாக நடக்கும் போராட்டம்.. தூய்மை பணியாளர்கள் கேட்பது என்ன? மாநகராட்சியால் என்ன கொடுக்க முடியும்? என்று மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தூய்மை பணியாளர்களுக்கு எப்போதும் பணிப் பாதுகாப்பு உள்ளது. பல்வேறு சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கிறோம். ஆகஸ்ட் 31க்குள் பணிக்கு திரும்பும் படி கோரியுள்ளோம். முதலில் பணிக்கு திரும்பட்டும். பிற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். பணி பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு உண்டு என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
