பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்! அஜிதா ஆக்னல் உடன் நிர்மல்குமார் பேச்சு!

விஜய்க்காக உழைத்திருக்கிறோம்; பொறுப்பு தராமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என நிர்மல் குமாரிடம் அஜிதா ஆதரவாளர்கள் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.

Ajitha thoothukudi

சென்னை :பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 23, 2025) பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைவர் விஜய் அலுவலகத்துக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென விஜயின் காரை மறிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

அதிகப் பணம் செலவழித்து கட்சியை பலப்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், இன்று வெளியான தகவலின்படி, அவருக்கு பதிலாக கட்சிக்காக உழைக்காத, மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவருக்கு பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரியவந்தது. மேலும், அஜிதாவின் குடும்பத்தினர் திமுகவில் உள்ளனர் என்றும், சாதி ரீதியாகவும் பதவி மறுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.விஜய் அலுவலகம் வருவதற்கு முன்பே கட்சித் தலைமையிலிருந்து இரு நிர்வாகிகள் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதியாக இருந்தால் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், அஜிதா தனக்கு வேறு பதவி வேண்டாம், விஜயிடம் நேரில் குறைகளைச் சொல்லிவிட்டுப் போக விரும்புவதாக வலியுறுத்தினார்.விஜயின் கார் அலுவலகத்துக்குள் நுழையும்போது, அஜிதாவும் ஆதரவாளர்களும் நடுவழியில் நின்று மறித்தனர். உடனடியாக தனியார் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) செயல்பட்டு அவர்களை வலுக்கட்டாயமாக விலக்கித் தள்ளினர்.

விஜய் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் நேரடியாக அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அஜிதா பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தார்.இந்தச் சம்பவம் தவெகவில் உட்கட்சி அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அமைப்புகளை முழுமையாக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பதவி நியமனங்களில் ஏற்பட்ட அதிருப்தி பனையூர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அலுவலக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.