சென்னை :நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இலவசங்கள் மூலம் எந்தவிதமான நீடித்த வளர்ச்சியும் ஏற்படாது எனக் கூறிய அவர், தமிழ்நாடு ஏற்கனவே கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் இலவச அறிவிப்புகள் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பில் புதுமை எதுவும் இல்லை என்றும், இது மக்கள் கோரிய திட்டமா என்பதையும் சந்தேகமாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே போக்குவரத்துத் துறை பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கூடுதல் செலவுக்கான நிதியை எங்கிருந்து அரசு திரட்டப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இலவச பேருந்து வேண்டும் என்று யார் கேட்டது? முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?” என வினவிய சீமான், தற்போதைய அரசு பேருந்துகளில் அரசியல் தலைவர்கள் தங்களது குடும்பத்துடன் பயணம் செய்யத் தயார் இருப்பார்களா என்றும் சாடினார். இப்போது சாலையில் ஓடும் பல பேருந்துகள் பழுதடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், இத்தகைய சூழலில் இலவச பயணம் என்பது தீர்வாகாது என்றும் கூறினார்.
ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் நிலையில், அவர்களை அவமானப்படுத்தும் வகையிலான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். “ஓசியில் தானே வருகிறாய்” என்ற வார்த்தைகள் பேருந்துகளில் பேசப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றும், இத்தகைய சூழலை உருவாக்கிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலவச பயணத்தைவிட, மகளிர் சுயமரியாதையுடன் வாழும் வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
அதேபோல், வீடு கட்டித் தரும் திட்டங்களையும் விமர்சித்த சீமான், இரு ஆட்சிகளிலும் கோழிக்கூடு போல் வீடுகள் கட்டப்படுவதாக கூறினார். “அந்த வீடுகளில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ சென்று வாழ்வார்களா?” என கேள்வி எழுப்பிய அவர், மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்களுக்குப் பதிலாக, பெண்கள் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவிற்கு ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
