டெல்லி :சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத், வரும் IPL 2026 மெகா ஏலத்தில் சிஎஸ்கே எப்படி அணியை வலுப்படுத்த வேண்டும் என்று தனது கருத்தை விரிவாகத் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா ஓய்வு, அஸ்வின் இல்லாத நிலையில் ஸ்பின் பிரிவு பெரும் பலவீனமாக உள்ளது என்று கூறிய பத்ரிநாத், “ரவி பிஷ்னாயை சிஎஸ்கே கண்டிப்பாக குறி வைக்கும். அவர் 4 ஓவர்களையும் முழுமையாக வீசக்கூடியவர். செப்பாக் மைதானத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படுவார்கள்.
நூர் அஹ்மத் உடன் ரவி பிஷ்னாய் சேர்ந்தால் சூப்பர் ஜோடியாக அமையும். விலை அதிகமாகப் போனாலும், சிஎஸ்கே-வுக்கு இது நீண்ட கால முதலீடாக அமையும்” என்று தெரிவித்தார். ரவி பிஷ்னாய் தற்போது லக்னோ அணியால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பெறுவதற்கு பல அணிகள் போட்டியிடும் என்றாலும், சென்னை மைதானத்தின் தன்மைக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்று பத்ரிநாத் வலியுறுத்தினார்.
“சிஎஸ்கே-வுக்கு இப்போது ஒரு நல்ல ரிஸ்ட் ஸ்பின்னர் மிகவும் அவசியம். ரவி பிஷ்னாய் அந்த இடத்தை நிரப்புவார்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.டெத் ஓவர்களில் (கடைசி 4-5 ஓவர்கள்) பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு மற்றொரு பெரிய பிரச்சினை என்று கூறிய பத்ரிநாத், “டெத் பவுலர் இல்லாமல் போனதுதான் கடந்த சீசனில் பெரிய பின்னடைவு. அன்ரிச் நோர்ஜி புதிய பந்து, டெத் ஓவர்கள் இரண்டிலும் சிறப்பாக வீசுவார். ஜெரால்ட் கோட்சி மற்றொரு நல்ல தேர்வு, ஏற்கனவே ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர்.
மதீஷா பதிரனாவை மீண்டும் குறைந்த விலையில் வாங்குவதும் தவறில்லை. இந்த மூன்றில் யாராவது ஒருவரை கண்டிப்பாக வாங்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்.மொத்தத்தில், IPL 2026 ஏலத்தில் சிஎஸ்கே ஒரு தரமான ரிஸ்ட் ஸ்பின்னரையும், நம்பகமான டெத் பவுலரையும் வாங்கினால், மீண்டும் சாம்பியன் அணியாக உருவெடுக்க முடியும் என்று பத்ரிநாத் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ரசிகர்களும் இதே எதிர்பார்ப்பில் உள்ளனர். டிசம்பர் 16-ல் அபுதாபியில் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் சிஎஸ்கே எப்படி செயல்படும் என்பதை உலகமே உற்று நோக்கியுள்ளது.
