"அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்"..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

தன்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Udhayanidhi Stalin

சென்னை :அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு பல மாவட்டங்களில் இருக்கும் தொண்டர்கள் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டாடியும் வருகிறார்கள். அதைப்போல, பல மாவட்டங்களிலிருந்து உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஆசையோடு சென்னைக்குத் வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் ஆசையோடு வேறு மாவட்டங்களிலிருந்து வருவதால், அவர்களுடைய பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அது என்னவென்றால், தன்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறும், பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தானே வந்து உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன் எனத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

unknown node